அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு.!

0
192

அஸ்வெசும கொடுப்பனவு நடவடிக்கைகளில் நடைமுறையில் இருந்த முறைமையை நாம் மாற்றியுள்ளோம் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வோம். எனினும், அந்த முறைமையை முழுமையாக நீக்கமுடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) எதிர்க்கட்சி எம்.பி. ஹர்ச டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தை உறுதிப்படுத்துவது மிக முக்கியம். இம்தம் 15 ஆம் திகதியளவில் உறுதிப்படுத்தப்படும் இந்த இரண்டாம் கட்ட விடயங்கள் முக்கியமானவை.

மூன்று தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையையே நாம் தற்போது மாற்றியுள்ளோம். இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத அல்லது அதனை விரும்பாத தரப்பினரும் உள்ளனர்.

பழைய முறைமையையே முன்னெடுத்து அதிலுள்ள தவறுகள், அது தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என சிந்திக்கும் தரப்பினரும் உள்ளனர்.

எவ்வாறெனினும், இந்த நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அந்த குறைபாடுகளை இக்காலங்களில் இனங்கண்டு கொண்டுள்ளோம்.அது தொடர்பில் அரச அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தியே குறித்த முறைமையில் மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேவேளை, கடந்த வருடம் டிசெம்பர் 31ஆம் திகதி முதல் இன்று வரை பிரதிபலனை பெற்றுக் கொள்ளாத பயனாளிகளும் உள்ளனர். அது தொடர்பான விபரங்களை நாம் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு இந்த வாரத்தில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளோம் என்றார்.

அந்தக் குழுவின் அங்கீகாரம் கிடைத்ததும் நாம் அடுத்த வாரத்தில் அதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு அதனை நிறைவேற்றி, அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.

அந்த வகையில் பிரதிபலன்கள் கிடைக்காதவர்களுக்கு வரவு- செலவுத் திட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமைக்கு ஏற்ப அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும்.

எனவே, புதிய முறைமையை முழுமையாக நீக்க முடியாது. எனினும் அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here