முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் இளைஞனை தாக்கிவிட்டு கனடாவுக்கு தப்பி சென்ற நபர்.!

0
111

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த இளைஞனை தாக்கியதை தொடர்ந்து சந்தேக நபரொருவர் கனடா நாட்டுக்கு தப்பித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று (2024.06.08) அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வற்றாப்பளை பகுதியில் தமது வீட்டின் முன்பாக தாயுடன் நின்றிருந்த குழந்தை மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் குழந்தை காயமடைந்தது.

விபத்துக்குள்ளான அக்குழந்தையின் வீட்டாருக்கும் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படும் கனடா நாட்டிலிருந்து வருகை தந்த நபருக்கும் இடையே முன்னதாக முரண்பாடு இருந்துள்ளது.

இந்நிலையில் அவ்விபத்துச் சம்பவத்தினையடுத்து இன்று அதிகாலை 1 மணியளவில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் தலைமையில் கும்பலொன்று வீடு புகுந்து இளைஞனை தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளது.

அதனையடுத்து அவர்கள் வருகை தந்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் அடிப்படையில் முள்ளியவளை பொலிஸார் சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளனர்.

ஆனால் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது பற்றி பாதிக்கப்பட்ட தரப்பினரின் உறவினர்கள் தெரிவிக்கையில் வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒரு கும்பலை வைத்து தாக்குதல் நடத்திவிட்டு, கனடா நாட்டுக்கு தப்பித்து சென்றதாகவும் இது ஒரு கொலை முயற்சி எனவும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த வற்றாப்பளை பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here