முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக் கோரி மீனவர்கள் போராட்டம்.!

0
126

முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக் கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன மக்கள் இன்று (10) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

அரசாங்க அதிபர் கூறுகையில் மீனவர்கள் பிரச்சினைகளை நாம் அறிவோம் விரைவில் சட்டவிரோத நடவடிக்கைக்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நேற்று முன்தினம் கிழக்கு மாகாண கடற்படை அதிகாரி மற்றும் உதவிப் பணிப்பாளர் சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியதாகவும், மீனவர்கள் பிரச்சினை தொடர்பான 3வது கூட்டம் தொடர்பாக கடற்தொழில் அமைச்சரிடம் கேட்டுள்ளதாகவும், வருகின்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் மீனவர்களை சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய அரசே ஏன் கடல் வளத்தை சுரண்ட துணை நிக்கிறாய், கடற்படையினரே சட்டவிரோத வெளிச்சம் உன் கண்களுக்கு தெரியவில்லையா, அரசே சட்டவிரோத தொழிலுக்கு துணைபோகாதே, எதிர்கால பரம்பரைக்கு உப்பு நீரா மிச்சம், கடற்படையினரே எமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து தாரும், அடிக்காதே அடிக்காதே மீனவர்கள் வயிற்றில் அடிக்காதே போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லதுரை நற்குணம் யாழ்ப்பாண மாவட்ட மீனவ கூட்டுறவு சம்மேளன உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் மற்றும் யாழ் மாவட்ட மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here