யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் (13) நேற்று மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…
குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் இன்று மதியம் குறித்த வீட்டுக்குச் சென்ற வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டுக் கதவு, ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை அடித்துடைத்து சேதமாக்கியதுடன், வீட்டிலிருந்த இரண்டு இலட்சத்துப் பதினோராயிரம் ரூபா பணம், மூன்று பவுன் சங்கிலி மற்றும் இரண்டு பவுன் காப்பு என்பவற்றைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், அயல் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் பார்வையிட்டுக்கொண்டு இருந்தவேளை, தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் மன்னிப்பு கேட்பதற்காக வந்தவேளை பொலிஸார் அவரை கைது செய்தனர்.
அவரை விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.