புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமீரகம கிராம மையவாடிக்கு அருகில் உள்ள வீதியில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலமொன்று இன்று (21) காலை மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இன்று (21) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய குறித்த இளம் குடும்ப பெண் மீண்டும் வீடு திரும்பாததை அடுத்து கணவர் தனது மனைவியை தேடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே குறித்த பெண் வீதியில் காணப்பட்ட வெள்ளநீருக்குள் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளம் பெண்ணுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதாக குடும்பத்தாரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
அத்துடன் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத பிரசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சமீரகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்
சடலம் பிரேத பிரசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.