மாத்தளை, பலாபத்வல, கிருலுகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (22) இடம்பெற்றுள்ளது, மேலும் தெரியவருகையில்..
வத்தேகமவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி தம்புள்ளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் 54 வயதான தாய் தம்மிகா பத்மினி மற்றும் 17 வயது மகள் சச்சினி தாரகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற மகனும் பின்னால் பயணித்த தந்தையும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.