இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் தானியங்கி கதவில் சிக்கி 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் சிறுவனின் பாட்டியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் வயலத்தூரை சேர்ந்த அப்துல் கபூர் மற்றும் சாஜிலாவின் மகன் முஹம்மது சினான். இவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சிறுவன் சினான் தொழுகைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து முன்பக்கம் இருந்த வேறு ஒருவரின் வீடு வழியாக பள்ளிவாசல் சென்றுள்ளான்.
அப்போது அங்கிருந்த தானியங்கி கதவை திறந்து உள்ளிருந்தபடியே கதவு அடையும் விதமாக ஸ்விட்சை அழுத்திவிட்டு வெளியேறி உள்ளான். அதற்குள்ளாக தானியங்கி கதவு சிறுவனின் கழுத்து பகுதியை நெறித்துள்ளது. சென்சார் வேலை செய்யாத காரணத்தினால் சிறுவன் கழுத்துப் பகுதி கதவில் சிக்கி உயிருக்கு போராடி இருந்திருக்கிறான்.
தானியங்கி கதவு உள்ள வீட்டில் தற்போது யாரும் இல்லாத காரணத்தினாலும் அந்த வழியாக யாரும் வராத காரணத்தினாலும் சிறுவன் தானியங்கி கதவில் சிக்கி உயிருக்கு போராடியதால் யாராலும் காப்பாற்ற முடியவில்லை. சற்று நேரம் கழித்து அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து தகவல் தெரிவித்ததன் பேரில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற சிறுவனின் பாட்டி மருத்துவமனையிலேயே அதிர்ச்சியில் உறைந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.