முல்லைத்தீவு மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (29) உயிரிழந்தார்.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் (ONUR) பணிப்பாளர் சபை பிரதிநிதியாக கந்தசாமி கருணாகரன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 25ம் திகதி நடந்த மாங்குளம் விபத்தினால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பேருந்து மீது வீதியில் பயணித்த பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்ட நாளில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.