நோட்டன் பிரிட்ஜ் 04 ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (30) பிற்பகல் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதற்கு முன்னர் 9 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து பிரதேசத்தை விட்டு தப்பியோடி மாவனெல்லையில் சுமார் 10 வருடங்களாக தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் 05 மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று காலை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொலிஸில் கையொப்பமிட வந்துள்ளார்.
பின்னர், சந்தேகநபரின் பிணையில் கையொப்பமிட்ட தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்ற அவர், அவரது மகளை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கற்பழிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் படி, வீதித் தடைகளை பயன்படுத்தி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்படும் பாடசாலை மாணவி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதான நோட்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.