கொழும்பை உலுக்கிய மாணவன் – மாணவியின் மரணம்: விசாரணையில் புதிய தகவல்.!

0
131

கொழும்பு, கொம்பனிவீதியில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவன் மாணவியின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதுடன் இயந்திரங்களில் விழுந்தமையினால் உடல்கள் சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குருந்துவத்தையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி பயின்ற மாணவியும் மாணவனும் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என கூறப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த மாணவ மாணவிகள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், நெருங்கிய நண்பர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டுள்ள நிலையில் அவரது கைப்பேசியில் இதுபோன்ற பல புகைப்படங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி அவ்வாறான புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது இருவரும் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.மேலதிக விசாரணைகளுக்காக மாணவன் மற்றும் மாணவியின் கைப்பேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொம்பனித் தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.இதேவேளை சம்பவத்தன்று மாணவி பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here