திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான பெண்ணின் சடலமும் அவரது கைப்பையும் இன்று (5) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான கிணற்றை மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம் தஸ்னீம் பௌசான் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று (05) தோண்டியபோதே அந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம்பெண் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடந்த முதலாம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப்புறத்தில் பாழடைந்துபோன கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த யுவதியும், அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்ததாகவும் கடந்த மே மாதம் யுவதி தன் காதலனுடன் மட்டக்களப்புக்கு சென்று வசித்து வந்ததாகவும் மே மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் அவருடன் தொடர்பில்லாமல் போயிருந்ததாகவும் அந்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும் குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.