திருகோணமலை – கண்டி வீதியில் கப்பல்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (4) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த சாரதியின் மனைவியும் மகளும் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.