மோசடிகளை அம்பலப்படுத்திய சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல்.! Video

0
223

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட வைத்தியர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் (04-07-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அங்கு இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு இன்றி காணப்பட்ட சுகாதார சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயற்பட்டார். இவ்வாறான நிலையில் நேற்றையதினம் (04) காலை கடமை நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்லாத வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள் தனது அனுமதி இன்றி சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் நுழைந்து கூட்டம் நடாத்துவதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இவ் விடயம் தொடர்பில் ஆராய முற்பட்டபோது வைத்திய அத்தியட்சகரின் தொலைபேசி பறிக்கப்பட்டு அவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இவ் விடயம் தொடர்பாக சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரின் தன்னிலை விளக்கமும் சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் வீடியோ பதிவுகள் முகநூலில் பதிவேற்றப்பட்டது.

குறித்த பதிவில் மகப்பேறு விடுதி திடீர் விபத்து பிரிவு ஆகியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரைகளை விடுத்ததன் எதிரொலியாக முன்னாள் வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டுதலின் பேரில் தனக்கு எதிராக வைத்திய அதிகாரிகள் சங்கத்தை களம் இறக்கி தன்னை குறித்த வைத்தியசாலையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த வைத்தியசாலையின் வளங்கள் மக்களுக்கு பயன்படுத்தப்படாத நிலையில் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் மகப்பேற்று விடுதியை கூட இயங்க விடாமல் வைத்திய குழு ஒன்று தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சிலர் சேர்ந்து குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் முயற்சியில் கடந்த காலங்களில் செயற்பட்டதாகவும் தான் இந்த வைத்தியசாலைக்கு வருகை தந்ததும் இவ்வாறான விடயங்களுக்கு இடம்கொடுக்க மாட்டேன் என தெரிந்த நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தன்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக பாதிக்கப்பட்ட வைத்தியர் குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here