நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தனகல்ல, லுணுகம்வெஹர, கிரிஉல்ல மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்றைய தினம் (13) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரிஉல்ல – ஹமன்கல்ல வீதியின் கொஹிலாவல பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குளியாபிட்டிய மற்றும் கிரிஉல்ல பிரதேசங்களில் வசித்து வந்த 19 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை காலி – கொழும்பு வீதியில் அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை லுணுகம்வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 100 அடி வீதியில், வீதியைக் கடந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் காயமடைந்த பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.லுனுகம்வெஹர, மீனவ கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை நிட்டம்புவ – ஹங்வெல்ல வீதியில் ஊராபொல சந்தியில் பாதசாரி பெண் ஒருவர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த பெண் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.ரதம்பல, ஊராபொல பிரதேசத்தில் வசித்து வந்த 68 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.