பசறை பிரதேசத்தில் வசிக்கும் தாயும் மகனும் கிராமிய வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட பணத்தை வங்கியின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
65 வயதான தாயும் மகனும் இரவு பகலாக உழைத்த பணத்தை வங்கியில் நிலையான வைப்பில் வைத்திருந்த பணமே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
மிளகு, கித்துல் சாகுபடியில் எடுக்கப்பட்ட பணத்தையே இவ்வாறு வங்கியில் நிலையான வைப்பில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியின் சிகிச்சைக்காகவும் 2 பிள்ளைகளின் கல்விக்காகவும் புதிதாகக் கட்டப்படும் வீட்டின் எதிர்காலச் செலவுகளுக்காகவும் அதனைப் பயன்படுத்தும் நோக்கில் பணத்தை பெற நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்தக் கணக்கில் சுமார் 50 லட்சம் வரை பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அண்யைில் வீடு கட்ட 50 லட்சம் ரூபாயை நிலையான வைப்பிலிருந்து கடன் பெற, வங்கிக் கிளைக்கு சென்றபோது கணக்கில் பணம் இல்லை என்பது தெரிய வந்தது. இது தொடர்பில் குறித்த நபர் வங்கி அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றபோது, அவர்கள் தன்னை கேலி செய்து சிரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் ஊவா மாகாண கூட்டுறவு ஆணையாளரை சந்தித்து முறைப்பாடு செய்த போது பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அவர் கூறியுள்ளார். முறைப்பாட்டினை விசாரணை செய்த பதுளை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இந்த வங்கிக் கிளையில் பணியாற்றிய 2 பெண்களை கைது செய்துள்ளனர்.
தாயும் மகனும் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர்கள் 50 இலட்சம் ரூபாவை மோசடியாகப் பெற்றுக் கொண்ட போலி ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் போலி கையொப்பமிட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இருவர் மீதும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.