யாழில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் நேரலையில் வீடியோ வெளியிட்டவர் கைது.!

0
109

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், வைத்தியர்கள் பங்கேற்புடன் இன்று இடம்பெற்றது.

இதன்போது கூட்டத்தில் அநாமாதேயமாக பங்கேற்ற ஒருவர் கலந்துரையாடலை முகநூல் வழியாக நேரலையில் ஒளிபரப்பியிருந்தார். இதனையடுத்து முகநூல் நேரலை செய்யவேண்டாம் எனவும் அவரை அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கவே அதனை மறுத்து தொடர்ந்து அமர்ந்திருந்தார்.

இதன்போது கூட்டநிறைவில் அங்கு சுகாதார அமைச்சருடன் பேச முற்பட்ட நிலையில் அமைச்சர் அங்கிருந்து செல்லவே, கூட்டத்தில் நின்ற அதிகாரிகளுடன் குழப்பத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து சத்தமிட்டவாறே ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடிய பிரதம செயலக அலுவலகத்தில் சென்று முரண்பாட்டில் ஈடுபட்டார். அதிகாரிகள் வெளியேறச் சொல்லியும் தொடர்ந்து முரண்பாட்டை ஏற்படுத்தவே பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாவகச்சேரி பொலிஸார் குழப்பத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். சந்தேக நபரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடலில் அநாமதேயமாக குறித்த நபர் நுழைந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவும் அழையா விருந்தாளியாக பங்கேற்று முகநூல் நேரலை செய்தமையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here