திருகோணமலையில் யுவதி ப.டு.கொ.லை – நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

0
95

சேருநுவர – தங்க நகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதியின் கொலை தொடர்பான வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 7 பேருக்கும் மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளதுடன் விசாரணையை திருகோணமலை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு மாற்றவும் கட்டளை பிறப்பித்துள்ளார்.

யுவதியின் கொலை வழக்கு இன்றைய தினம் (19) மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் வழக்கு தொடுனரான மூதூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்தேக நபர்களான 2ஆம், 3ஆம், 4ஆம், 6ஆம் எதிராளிகளை குறித்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் திருப்திகரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் விசாரணைகள் பக்கச்சார்பாக இடம்பெறுவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருதுவதாக விண்ணப்பித்திருந்ததோடு, இந்த வழக்கு விசாரணையை வேறு தரப்பினருக்கு கையளித்து முறையான விசாரணையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு தமது வாதங்களை முன்வைத்தனர்.

அத்துடன் குற்றவாளிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் பொலிஸாரின் விண்ணப்பங்களுக்கேற்ப 2ஆம், 3ஆம், 4ஆம், 6ஆம் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிபதி சந்தேக நபர்களுக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலை நீடித்ததோடு, இந்த வழக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றவும் கட்டளை பிறப்பித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக சட்டத்தரணிகளான ஏ.ஆர்.சுஹாட், ஏ.ஏ.எம்.ஷகிடீன், எம்.எஸ்.எம்.ஷகீர், அமானுல்லா ஷிபா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகரைச் சேர்ந்த நடேஷ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம்பெண் காணாமல் போயிருந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சந்தேக நபரான யுவதியின் காதலன் உட்பட அவரது தந்தை, சிறிய தந்தை, சகோதரி, வீட்டில் வேலை செய்யும் நபர், ஜேசிபி வாகனத்துடன் தொடர்புடைய 2 நபர்கள் உட்பட 7 பேர் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here