கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 11 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் மதவச்சி, கெக்கிராவ, அனுராதபுரம் மற்றும் பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று(20) பதிவாகியுள்ளன.
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதியின் 144 ஆவது கிலோமீற்றர் துாண் அருகில் முச்சக்கர வண்டியும் எரிபொருள் நிரப்பப்பட்ட பௌசரும் நேருக்கு நேர் மோதியதில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் மஹமல்கொல்லேவ பிரதேசத்தில் வசித்து வந்த சிறுமியே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பௌசரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கெக்கிராவ – கணேவல்பொல வீதியில் நீதிமன்ற சந்தியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியோரத்தில் உள்ள மதகில் மோதி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சாரதி கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அனுராதபுரம் – ரம்பேவ வீதியில் புளியங்குளத்தில் லொறி ஒன்று வீதியைக் கடந்து சென்ற பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அதேநேரம் காலி-கொழும்பு வீதியில் பயாகல ரயில் நிலைய சந்தியில் வீதியைக் கடந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பயாகல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.