யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றியிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பதவித்தரம் இறக்கப்பட்டு வைத்திய அதிகாரியாக தற்காலிகமாக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக அவர் கடமையாற்றியிருந்த போது, அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
எனினும் அவர் தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதாகத் தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சாவகச்சேரி கிளை உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர்.
எவ்வாறாயினும் சாவகச்சேரி பகுதியில் உள்ள மக்களும் சிவில் அமைப்புகளும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
அதேநேரம், அவருக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அவருக்கு சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் செல்வதற்கும் வைத்திய நிர்வாகத்தில் இடையூறை ஏற்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.
அத்துடன் அவர் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகச் சாவகச்சேரி காவல்துறையில் ஆதாரங்களுடன் வாக்குமூலம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் தாம் காவல்துறையில் வாக்குமூலம் வழங்கியிருப்பதாக வைத்தியர் அர்ச்சுனா பேஸ்புக் பதிவொன்றில் கூறியிருந்தார்.
எனினும் அவர் எவ்வகையான ஆதாரங்களை முன்வைத்தார் என்பது குறித்த விபரங்கள் அவர் தரப்பிலிருந்தோ, காவல்துறை தரப்பிலிருந்தோ இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்ததுடன் புதிய வைத்திய அத்தியட்சகர் ஒருவர் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டார்.
இந்தநிலையில் அவர் வைத்திய அதிகாரியாக தரமிறக்கப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலைக்குத் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் லால் பனாப்பிட்டியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் பேஸ்புக் பதிவொன்றை இட்டுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, தம்மைப் பதவி விலகுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.