மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மாரடைப்பை மருத்துவ ரீதியாக “மயோகார்டியல் இன்ப்ராக்ஷன்” என அழைப்பார்கள். ஒருவருக்கு எப்போது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறதோ, அந்த சமயத்தில் இந்த மாரடைப்பு ஏற்படுகிறது.
இந்த நிலை ஏற்படும் போது உடனடியாக சிகிச்சை கொடுக்க வேண்டும். இதை தவறும் பட்சத்தில் போதுமான இரத்தம் கிடைக்காமல் இதய தசைகள் மீள முடியாத அளவில் சேதமடையும். இதனால் மரணம் கூட ஏற்படலாம்.
சமீப காலமாக மாரடைப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உடற்பயிற்சி செய்யாமை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு அதிகரித்து வருகின்றது. மாரடைப்பு வயதானவர்களுக்கு மட்டுமல்ல இளம் வயதினருக்கும் வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் மாரடைப்பு வருவதற்கு முன்னர் சில அறிகுறிகள் மூலம் அதனை நாம் அறிந்து கொள்ளலாம். அப்படியான அறிகுறிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மாரடைப்பு வர முன்னர் திடீரென்று நெஞ்சு வலி மற்றும் நெஞ்சு பகுதியில் அசௌகரியம் ஏற்படுவது போன்று தோன்றும். இந்த வலி எந்தவித காரணமும் இன்றி இரவு நேரத்தில் வந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன் வலி வந்து வந்து போகும் பட்சத்தில் உரிய மருத்துவரை நாடலாம்.
2. இரவு நேரத்தில் திடீரென்று மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் இதுவும் மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம். மூச்சுத்திணறல் பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருந்தாலும் மூச்சுத்திணறலுடன் லேசான நெஞ்சு வலி இருந்தால் மாரடைப்பு ஏற்படலாம்.
3. வாந்தி, குமட்டல் போன்றவை அஜீரண கோளாறின் அறிகுறியாக உள்ளது. ஆனால் வாந்தியும், குமட்டலும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். நெஞ்சுப்பகுதியில் வலியுடன் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது. இதனால் இரவில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
4. ஒருவர் பகல் வேளையில் மிகுந்த உடல் சோர்வுடன் இருந்தால் இவர்களுக்கும் காலப்போக்கில் மாரடைப்பு ஏற்படலாம். உடல் சோர்வு சாதாரணமாக இல்லாமல் விவரிக்க முடியாத நிலையில் இருந்தால் உடனே கவனிக்க வேண்டும்.
5. செரிமான பிரச்சனைகளினால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த பிரச்சினை அதிகரிக்கும் பட்சத்தில் இதய பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இரவு வேளைகளில் காரணமின்றி குமட்டல், அஜீரண கோளாறு ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படலாம். அத்துடன் மூச்சு திணறல், நெஞ்சு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டால் உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.