கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (27) ரத்கம, பொலன்னறுவை, மாலபே மற்றும் ஜாஎல பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
ரத்கம – ரத்ன உதாகம கிளை வீதியிலுள்ள மலைப்பாங்கான இடத்தில் பயணித்த துவிச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் சுவரில் மோதிய விபத்தில் அதன் செலுத்துனர் உயிரிழந்துள்ளார். கதுருபே புஸ்ஸா பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை பொலன்னறுவை கல்கொரிய சந்தியிலிருந்து கல்குவாரி நோக்கி பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 68 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மாலபே – ஹோகந்தர வீதியின் ஹோகந்தர பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பேருந்து தரிப்பிடத்தில் இருந்த பெண் ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 70 வயதுடைய பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை ஜாஎல – மினுவாங்கொடை வீதியில் CTB சந்தியில் வேன் ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதிய விபத்தில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.