அனைத்து அரச பாடசாலைகள், அனைத்து அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் விசேட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்று முதல் மூன்று வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சுக்கும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் காப்புறுதியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் சார்பாக அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுடன், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த பெரேராவும் இதில் கைச்சாத்திட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கல்வி அமைச்சு இதற்காக 7,112 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளதாகவும், இந்த காப்புறுதி மூலம் அரச அல்லது தனியார் வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக்கான நன்மை ரூ. 300,000/- மற்றும் வெளிநோயாளர் சிகிச்சைக்கு ரூ. 20,000/- மற்றும் தீவிர நோய் நன்மையாக ரூ. 1,500,000/- வரை மாணவர்கள் பலனடைய முடியும் என தெரிவித்தார்.
ஆயுள் காப்புறுதியின் கீழ் வருடாந்த வருமானம் ரூ.180,000/- க்கும் குறைவான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலதிகமாக, ‘அவஸ்வசும’ திட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 75,000/= மற்றும் ஒரு மரணத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகையான 225,000/= தொகையானது குடும்பத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமாகப் பிரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த காப்பீட்டுக்கான இலத்திரனியல் காட் ஒன்று பாடசாலை மாணவர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.