உலகளவில் பிரபல பிராண்டுகளின் ஆணுறை மற்றும் லூப்ரிகண்ட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுத் தன்மை கொண்ட இரசாயணங்களை பயன்படுத்தி வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சில ட்ரோஜன் ஆணுறை மற்றும் கே-ஒய் ஜெல்லி லூப் ஆகியவற்றில் உள்ள அதிகளவு நுண்ணுயிரி பொருட்கள் சருமம் வழியே உடலுக்குள் சென்று பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.
மனிதர்களின் பிறப்புறுப்புகள் மிக மெல்லிய சருமம் மற்றும் ஏராளமான இரத்த நாளங்கள் உள்ளதால் இவை நச்சு தன்மை கொண்ட இரசாயணங்களை எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தையின்மை, விந்தணு பாதிப்பு மற்றும் கர்ப்பகால குறைபாடுகள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும் இரசாயணங்கள் இரத்த நாளங்கள் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் சென்று பாதிப்பை அதிகப்படுத்தும்.
மமாவேஷன் எனும் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இதுபோன்ற பொருட்களில் ஃபுளோரைன் இடம்பெற்று இருக்கிறதா என சோதனை செய்தனர்.
இதில் குறிப்பிட்ட ரக ஆணுறைகளில் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமான ஃபுளோரைன் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 29 பொருட்களில் கிட்டத்தட்ட 6 பொருட்களில் (20 சதவீதம்) பாதுகாப்பற்ற அளவில் ஃபுளோரைன் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.