மன்னாரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவரை சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம், மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து சனிக்கிழமை(3) காலை வைத்தியர் அர்ச்சுனா, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வைத்தியர் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, அவரை இன்றைய தினம் (7) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மீண்டும் வைத்தியர் அர்ச்சுனா, இன்றைய தினம் (7) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், அவரை சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வைத்தியரை பார்வையிடுவதற்றகாக மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் நீதிமன்ற பகுதியில் சூழ்ந்து கொண்டமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க சென்ற நிலையில், வைத்திய செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிணையில் வந்தவுடன் வைத்தியர் அர்ச்சுனா 4 நாட்களுக்கு பின்னர் தனது facebook இல் ‘எனது தமிழ் முஸ்லிம் சிங்கள அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். I’m back! Thank you so much everyone’ என பதிவிட்டுள்ளார்.