குதிரமலை கடற்பகுதியில் 35 இந்திய மீனவர்கள் கைது..!

0
66

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் புத்தளம் – கற்பிட்டி வடக்கு குதிரமலை கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு படகுகளில் வருகை தந்த இந்திய மீனவர்கள் கற்பிட்டி வடக்கே குதிரமலைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினரால் இந்த 35 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த நான்கு விசைப் படகுகளும், மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மீன்பிடி உள்ளிட்ட சில உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 35 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பிரதேச கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை (05) குதிரமலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 44 இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 322 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here