கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வேவல்தெனிய பகுதியில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. நிட்டம்புவயிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சாரதியின் தூக்கமின்மையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காயமடைந்த மூவரில் ஒருவர் வரக்காபொல ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இருவரும் பொது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள தங்கோவிட்ட பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.