பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை ஆசிரியர் ஒருவரும், சம்பவத்தை மூடி மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலையின் பெண் பிரதி அதிபரும் மஹாவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மஹாவெல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
12 வயது சிறுமி, தான் படிக்கும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், குறித்த சிறுமி இது குறித்து பாடசாலையின் பிரதி அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் யாரிடமும் கூற வேண்டாம் என பிரதி அதிபர் சிறுமியிடம் கூறியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான ஆசிரியர் மற்றும் 49 வயதான பெண் பிரதி அதிபரும் மஹாவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.