அநுராதபுரம், மிகிந்தலை பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த இரு சிறுமிகளை ஏமாற்றி வீடொன்றிற்கு அழைத்துச் சென்ற பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் காதலனும் காதலனின் நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இரு சிறுமிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். 27 மற்றும் 30 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது…
இந்த இரு சிறுமிகளும் பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் பாடசாலைக்கு செல்லாமல் உடைகளை மாற்றி வேறு பிரதேசத்திற்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்காக மிகிந்தலை பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது இந்த சிறுமிகளில் ஒருவரது காதலனான சந்தேக நபர் வேனொன்றில் பஸ் தரிப்பிடத்திற்கு சென்று இரு சிறுமிகளையும் ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது அந்த வீட்டிலிருந்தவர்கள் சிறுமிகளை வீட்டில் தங்க வைக்க அனுமதி வழங்க மறுத்துள்ளனர். பின்னர் சந்தேக நபரான காதலன் இந்த சிறுமிகளை ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அந்த ஹோட்டலுக்குச் சென்ற காதலனின் நண்பன் சந்தேக நபரான காதலனுடன் இணைந்து இந்த இரு சிறுமிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.