யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையதம்பி ஜெயக்குமார் எனும் முதியவரே அவ்வாறு கோரியுள்ளார். குறித்த முதியவர் ஒரு காலை இழந்து, நோய்வாய்ப்பட்டு ஆதரவற்ற நிலையில் மானிப்பாய் உதயதாரகை சன சமூக நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தஞ்சமடைந்துள்ளார்.
அவரை அப்பகுதி மக்கள் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்க முயற்சிகளை எடுத்தனர். முதியோர் இல்லங்கள் அவரை ஏற்க மறுத்த நிலையில் கிராம சேவையாளரின் சிபாரிசு கடிதத்துடனும் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் எந்த முதியோர் இல்லமும் அவரை சேர்க்கவில்லை.
அந்நிலையில் பிரதேச செயலரின் சிபாரிசு கடிதத்துடன் பளையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக தமது செலவில் வாகனம் ஒன்றில் அவரை ஊரவர்கள் அழைத்து சென்ற போதிலும் , அங்கும் அவரை சேர்த்துக்கொள்ள நிர்வாகம் மறுத்துள்ளது.
அதனால் மீண்டும் தமது சனசமூக நிலையத்திற்கே அவரை அழைத்து வந்திருந்தனர்.
எந்தவொரு முதியோர் இல்லங்களோ, அமைப்புக்களோ, நிறுவனங்களோ தன்னை பொறுப்பேற்கததால், தன்னை கருணை கொலை செய்து விடுமாறு வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்