இன்று (19) காலை மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொவியாபான பிரதேசத்தில் உள்ள மீன் கடையொன்றில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
38 வயதான கெலும் சதுரங்க என்ற மீன் வியாபாரி ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலையானது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் செயல் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மீன் வாங்க வந்த மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 வயது மற்றும் 72 வயதுடைய இருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2022.08.04 இல் அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொவியாபான சயுருமா ஹோட்டலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த விஜேசேகர கமாச்சிகே அமில சந்தருவானின் சகோதரர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், மிதிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, தெஹிவளை சரணங்கர வீதி பகுதியில் நேற்று (18) இரவு 10.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, தங்காலை நலகம பிரதேசத்தில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்காலை தெமடவலவத்த பிரதேசத்தில் புதர் சூழ்ந்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இருந்த குறித்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.