நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு இருப்பதாக நான் நம்புவதோடு இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி ஈடேற்றுவேன் என்பதை இந்த சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவேன் என்று புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
செப்டெம்பர் 21ஆம் திகதியன்று நடைபெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, திங்கட்கிழமை(23) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த பதவிப்பிரமாண வைபவத்தில், மத தலைவர்கள் ஆசீர்வாதம் வழங்கினர். பதவிப்பிரமாணத்தின் பின்னர் உரையாற்றும் போதே, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்…
எமது நாட்டின் சனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு மக்களால் தம்மை ஆள்வதற்கான ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதே என்பது எங்களுக்கு தெரியும். எனினும் தோ்தலின்போது வாக்குகளை அளித்தல் மற்றும் ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதால் மாத்திரம் சனநாயகம் முற்றுப்பெற மாட்டாது.
அது சனநாயகத்தின் ஓர் அடிப்படை அம்சமாக அமைந்த போதிலும் எமது நாட்டில் சனநாயகத்தை பலப்படுத்துவதற்காக கட்டமைப்புக்களின் பலம் பொருந்திய தன்மை அதைப்போலவே சட்டங்களின் பலம்வாய்ந்த தன்மை அவசியமென்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே நான் முதலில் எமது நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
இந்நாட்டின் சனநாயகத்திற்காக எனது உச்சளவிலான அர்ப்பணிப்பினை எனது பதவிக்காலத்தில் வெளிக்காட்டுவேன். அதைப்போலவே எமது நாட்டில் தோ்தலொன்றின்போது, அதிகாரப் பரிமாற்றத்தின்போது அது சனநாயக ரீதியாக இடம் பெற்ற வரலாறு நிலவுகிறது.
ஒருபோதுமே தோ்தலொன்றின்போது இடம்பெறுகின்ற அதிகார பரிமாற்றத்தை எந்தவொரு தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கிணங்க செயலாற்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் மக்கள் ஆணையை சுமுகமாக ஏற்றுக்கொண்டு இந்த சனநாயக ரீதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கான அவருடைய அர்ப்பணிப்பையும் முன்மாதிரியான தன்மையையும் வெளிக்காட்டியமைக்காக நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளேன்.
அதைப்போலவே எங்களுக்கு கிடைப்பது சவால்கள் நிறைந்த ஒரு நாடே என்பதை நாங்கள் மிகவும் ஆழமாக விளங்கிக் கொண்டிருக்கிறோம். எமது அரசியலில் இதைவிட பரிசுத்தமாக்கப்படவேண்டிய, மக்கள் பாரியளவில் எதிர்பார்க்கின்ற சாதகமான அரசியல் கலாச்சாரமொன்றின் தேவை நிலவுகிறது. நாங்கள் அதற்காக அர்ப்பணிப்பு செய்யத்தயார்.
எமது நாட்டின் அரசியல்வாதி மற்றும் அரசியல் பற்றி பிரஜைகள் மத்தியில் பாதகமான ஓர் அபிப்பிராயமே நிலவுகிறது. அது பொருத்தமற்ற ஒரு இடமென்ற கருத்தே நிலவுகிறது. எனவே நாங்கள் எமது பக்கத்தில் உச்சளவில் மீண்டும் அரசியல் பற்றியும் அரசியல்வாதி பற்றியும் மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காக எமது தரப்பில் ஆற்றக்கூடிய பணிகளை ஆற்றத்தயார்.
அத்துடன் எங்களுக்கு கிடைக்கின்ற இந்த ஆழமான நெருக்கடியானது வெறுமனே ஓர் அரசாங்கம் அல்லது அரசியல் கட்சி அல்லது ஒரு தனிநபரால் மாத்திரம் கடந்து செல்லக்கூடிய நிலையில் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால் இதற்கு முன்னரும் நான் ஒரு மாயாஜால வித்தைக்காரன் அல்லவெனக் கூறியிருக்கிறேன். நான் ஒரு மெஜிக்காரனல்ல. நான் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண பிரஜை. ஆற்றல்கள் இருக்கின்றன. ஆற்றாமைகளும் இருக்கின்றன. நாம் அறிந்த விடயங்களும் இருக்கின்றன. அறியாத விடயங்களும் இருக்கின்றன. ஆனால் என்னுடைய முதன்மைப்பணி ஆற்றல்களை உறிஞ்சி எடுத்து அறிந்தவற்றை ஒன்று திரட்டி மிகச் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு இந்த நாட்டை நெறிப்படுத்துவதாகும்.
அதனால் அந்த கூட்டான இடையீட்டின் பங்காளியாவதே என்னுடைய பொறுப்பாகும். அதுபோலவே இந்த நெருக்கடியை நிறைவு செய்யும் போது அனைத்துத் துறைகளையும் சோ்ந்த பொதுப்பிரஜைகளுக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. அந்தப்பொறுப்பினை ஈடேற்றுவதற்காக நான் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கிறேன்.
ஆனால் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு இருப்பதாக நான் நம்புவதோடு இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி ஈடேற்றுவேன் என்பதை இந்த சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவேன்.
அதைப்போலவே குறிப்பாக எங்களுக்கு தெரியும் எமது நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும். உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப்பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும். அதற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் நாங்கள் ஒருபோதுமே தயங்கமாட்டோம்.
அதைப்போலவே எமது நாட்டை கட்டியெழுப்புகையில் கைத்தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்களை பலம்பொருந்தியவர்களாக கட்டியெழுப்ப அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுவார்களென நாங்கள் நம்புகிறோம்.
இறுதியாக நான் கூறிவைக்க விரும்புவது எமது நாட்டின் ஜனநாயகத்தினால் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன். அவ்வாறு தெரிவு செய்துகொள்வதற்காக மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். எனக்கு அளிக்கப்படாத வாக்குகளும் இருக்கின்றன. எனவே எமது வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது.
எனவே எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் எனது ஆட்சிக்காலத்தில் எனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாக அமைகின்றது. அந்த பணியை சரிவர ஈடேற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எதிர்காலத்தில் இவைனைத்துமே நடைமுறையில் சாத்தியமானதாக அமைகின்ற அனுபவத்தை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக உங்களுடைய ஒத்துழைப்பினை பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்றார்.