இஸ்ரேல் – பாலஸ்தீன் ஹமாஸ் போர் நடந்துவரும் நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஆயுதக்குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹிஸ்புல்லாவுக்கும் லெபனானுக்கும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி மாலை 4 மணியளவில் லெபனானில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த 1000 பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்தது. இதில், 12 பேர் பலியானர், 2800 பேர் காயமுற்றனர்.
இந்த தாக்குதலில் குறிப்பாக, ஈரான் தூதர் முஜூதாபா அமானி காயமடைந்தார். அதேபோல், ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகன் கொல்லப்பட்டார். முதலில் இந்த விபத்து எப்படி நடந்தது என தெரியாமல் இருந்த நிலையில், இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் இந்த சதித்திட்டத்தை தீட்டியிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தத் தாக்குதல் நடந்து முடிந்த மறுநாளே அதாவது 18ம் தேதி மீண்டும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் மொத்தம் மூன்று நபர்கள் இறந்தனர். அப்போது வெடித்த அந்த வாக்கி டாக்கிகளும் பேஜர் வாங்கிய காலகட்டத்திலேயே வாங்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், லெபனானின் தெற்கு பகுதியில் இன்று (23ம் தேதி) காலை இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை 274 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்ததிலும், காயமடைந்ததிலும் குழந்தைகள், பெண்கள், மருத்துவச் சிகிச்சையில் இருந்தவர்கள் எல்லாம் இருக்கின்றனர் என லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வான்வழி தாக்குதல் என்பதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.