நீரில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.!

0
64

கற்பிட்டி – நுரைச்சோலை, ஹாஜராவத்தை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன மாணவர் ஒருவர் நேற்று (29) மாலை ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

நுரைச்சோலை – ஹாஜராவத்தை பகுதியில் வசித்து வந்த அப்துல் ரஹீம் முஹம்மத் எனும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் நுரைச்சோலை – பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சாதாரன தரத்தில் கல்வி கற்றுவந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்த மாணவனும், அவரது சகோதரனும் லுஹர் தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, குளம் ஒன்றில் குளிப்பதற்காக குறித்த மாணவன் சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

எனினும் உயிரிழந்த மாணவனோடு சென்ற சகோதரன், விளையாடுவதற்காக மைதானத்திற்கு சென்றுவிட்டு தனது மூத்த சகோதரனை அழைத்துச் செல்ல மீண்டும் அந்த குளத்திற்கு வந்த போது அவர் அங்கு இருக்கவில்லை என சொல்லப்படுகிறது.

பின்னர் வீட்டுக்கு சென்ற சகோதரர், நடந்த சம்பவம் பற்றி வீட்டாருக்கு தெரியப்படுத்தியதுடன், அங்கிருந்தவர்களின் உதவியோடு குளத்தில் குளிப்பதற்காக சென்று காணாமல் போன மாணவனை தேடியுள்ளனர்.

இதன்போது சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின், குளத்தில் இருந்து காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை நடத்தினார்.

மேலும் பிரேத பரிசோதனையின் பின்னர் நீரில் மூழ்கியதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது எனத் தீர்ப்பு வழங்கி ஜனாஸாவை பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here