வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.!

0
67

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல், மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, நேற்று (10ம் திகதி) காலை 8.30 மணி முதல் இன்று (11ம் திகதி) அதிகாலை 2.30 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் ஹன்வெல்ல பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில், அது 196.5 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.

கம்பஹா திவுலபிட்டிய பிரதேசத்தில் 173.5 மில்லிமீற்றர் மழையும் களுத்துறை வொகன் தோட்டப் பகுதியில் 163.5 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது. இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பதுளை, கொழும்பு, கம்பஹா, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 01ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here