தாக்கி கொல்லப்பட்டு மடுல்சீமை சிறிய உலக முடிவு பகுதியில் 500 அடி பள்ளத்தில் வீசப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் சடலம் குடோ ஓயா இராணுவ கமாண்டோ உறுப்பினர்களால் இன்று (16) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
ஹாலிஎல ரொசவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய விவேகானந்தன் சூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று கமாண்டோக்கள் கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தில் இறங்கி மோசமாக சிதைவடைந்திருந்த உடலை மேலே கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் 10 கமாண்டோக்கள், இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று, பதுளை எலதலுவ இராணுவ முகாமைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொலிசார் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்ததுடன், உயிரிழந்தவரின் இரண்டு காலணிகளும், முக்காடும் காணப்பட்டன.
பள்ளத்தில் இறங்குவது கடினமாக இருந்ததால், ராணுவ கொமாண்டோ படை வரவழைக்கப்பட்டதாக பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் ஹாலிஎல பிரதேசத்தில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சடலத்தை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சந்தேகநபர்கள் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டிலிருந்து சென்ற மகன் பல நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என உயிரிழந்த இளைஞனின் தந்தை கடந்த 6ஆம் திகதி ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.