நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரையில் குடிபோதையில் இருந்த ஜோடிகள் போலீசாரிடம் மிகவும் தகாத முறையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது அந்த ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதாவது நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லூப் ரோடு பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக கார் ஒன்று நிறுத்தப்பட்டது. அங்கு வந்த போலீசார், காரில் இருந்த தம்பதிகளிடம் காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறினர்.
ஆனால் காரில் இருந்து இறங்கி வந்து காரை எடுக்க முடியாது என வாக்குவாதம் செய்தனர். அதாவது, இப்படி எடு, அப்படி எடு என்று கேலியாக போஸ் கொடுத்து, உதயநிதியை இப்போது கூப்பிடவா என்று கேட்டுள்ளனர்.
என்னிடம் இப்படி எல்லாம் தேவையில்லாமல் பேசக்க்கூடாது மூஞ்சிய பாரு என்று மிகவும் தகாத முறையில் பேசியுள்ளனர். நீங்க வீடியோ எடுக்கும் ஃபோன் வெறும் டப்பா. என்னிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போன் உள்ளது. இன்ஸ்பெக்டர் என்னைக் கண்டால் சல்யூட் அடித்துவிட்டுச் செல்கிறார்.
அப்படி இருக்கும்போது, நீ என்ன அரெஸ்ட் பண்ண போறியா? நாளை காலை உங்கள் வீட்டு முகவரியை பெற்றுக்கொண்டு உங்களை வெளியேற்றுவோம் என்று கூறியுள்ளனர்.
மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.