அறுகம் குடா விவகாரம் – மாலைதீவு பிரஜை கைது.. இருவர் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்.!

0
53

அறுகம் குடாவில் உள்ள வழிபாட்டுதலத்தில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. ஓக்டோபர் 19 முதல் 24 ம் திகதி இந்த தாக்குதலிற்கு திட்டமிட்டிருந்தனர்.

இந்த வாரத்தில் இஸ்ரேலியர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவிருந்தது என புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. வெளிநாடொன்று இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு எவ்வளவு தூரம் ஆதரவு வழங்கியது எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொள்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. காசாவிலும் லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதே அறுகம் குடா தாக்குதல் நோக்கம்.

அறுகம் குடாவிற்கு அருகில் உள்ள முஸ்லீம் கிராமங்களிற்கு ஏற்பட்டிருக்ககூடிய பாதிப்பே இந்த தாக்குதலின் மிக ஆபத்தான விளைவாகயிருந்திருக்க கூடும். இஸ்ரேலியர்கள் அதிகளவில் செல்லும் தென்பகுதியின் கரையோர நகரங்களான அஹங்கம அகுங்க போன்றவற்றிலும் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

யூதர்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டங்களை ஒக்டோபர் முதல் வாரத்தில் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர். எனினும் அவ்வேளை அவர்களிற்கு கிடைத்த தகவல்கள் போதுமானவையாக காணப்படவில்லை. இதன் காரணமாக சந்தேகநபர்கள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கொழும்பின் புறநகர் பகுதியிலிருந்து ஒருவரும், வடக்கிலிருந்து ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர், மூன்றாவது நபர் மாலைதீவை சேர்ந்தவர். இவர் மாலைதீவு தந்தைக்கும் இலங்கை தாய்க்கும் பிறந்தவர்.

இவர்கள் அனைவரும் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சிங்களம் பேசக்கூடிய மாலைதீவை சேர்ந்த நபரிடமிருந்து இரண்டு கையடக்கதொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் பலரின் விபரங்கள் காணப்படுகின்றன.

வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள இருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். அவர்கள் பல தடவை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை சிறைச்சாலையொன்றில் பல குற்றங்களிற்காக தண்டனை அனுபவித்து வந்தவர்கள்.

இதேவேளை தெகிவளையில் உள்ள இஸ்ரேலின் துணைத்தூதுவரின் இல்லத்திற்கு அருகே நடமாடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here