ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.
பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016 நவம்பர் 8ஆம் திகதி பொரளை புதிய மகசின் சிறைச்சாலைக்குப் பின்னால் உள்ள வீதியில் சோதனையின் போது 11.07 கிராம் ஹெரோயினுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர், ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டு நிரூபித்துள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக் காரருக்கு ஒரு மாதக் குழந்தை இருப்பதாகவும், அவருக்கு முன்னைய குற்றங்கள் எதுவும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, அவருக்கு மென்மையான தண்டனை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.