வடமராட்சி பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பருத்தித்துறை பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலைக்குச் செல்வதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது பதில் இல்லாமை காரணமாக குறித்த வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
54 மற்றும் 53 வயதான இரண்டு பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், இன்று உடற்கூராய்வு பரிசோதனை மேற்கொண்டார். மனைவி, முகத்திலும் தலையிலும் கொங்கிறீட் கல்லினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கணவன், தலையில் கொங்கிறீட் கல்லினால் தாக்கப்பட்டு, கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார்.
அந்த குடும்பத்தினர் சலவை தொழில் செய்து வருகிறார்கள். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சலவை ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர். கோப்பாய், அச்சுவேலி வைத்தியசாலைகளின் ஒப்பந்தத்தையும் பெற முயன்றுள்ளனர். இந்த பின்னணியில் கொலைச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொழில் போட்டி காரணமாக நடந்த கொலையாக இருக்கலாமா என்ற கோணத்திலும் பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, திருடர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகித்த போதும், கொல்லப்பட்டவர்கள் அணிந்திருந்த நகைகளும் திருடப்படவில்லையென்பதால், இது திருட்டுக்கு அப்பாலான வேறு காரணத்தினால் நடந்த கொலையென உறுதியாகியுள்ளது.