பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் அம்பகஹஒய பகுதியில் இன்று முற்பகல் பேருந்து விபத்துக்குள்ளானமைக்கு பிரேக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணமாக இருக்கலாமென காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன்போது பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நேர்ந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து விபத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர். நிவித்திகல மற்றும் குருநாகல் பிரதேசங்களில் வசிக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இரு மாணவிகளும் அடங்கும்.
சூரியவெவ, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று கல்வி நடவடிக்கைக்காக சென்று கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது.
அத்துடன் 39 பேர் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பேருந்தின் சாரதி உட்பட 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் 6 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் கல் ஒன்று காணப்பட்டமையினால் அதில் பேருந்து மோதியதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த மாணவிகளுக்கு சமூகவலைத்தளத்தில் ஏராளமானோர் இரங்கல்களை தெரிவித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. படங்கள் – FB