பதுளை துங்கிந்த பகுதியில், விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தை தெரிவித்துள்ளார்.
அக்மீமன பிரதேசத்தில் 2024 ஓகஸ்ட் 6ஆம் திகதியன்று இடம்பெற்ற முந்தைய விபத்து தொடர்பாக காலி அல்விட்டிகலவைச் சேர்ந்த சாரதி கட்டியர பிரவசன்ன குமார (41) என்பவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை நீதிமன்றம், 2024 ஓகஸ்ட் 6ஆம் திகதியன்று இடைநிறுத்தியிருந்தது.
இந்நிலையில், அவருக்கு போலியான சாரதி அனுமதிப்பத்திரம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த குறிப்பிட்டுள்ளார்.
பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, அந்த பஸ்ஸின் சாரதி, பொது வார்டுக்கு, செவ்வாய்க்கிழமை (05) மாற்றப்பட்டார். அவரிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை – மஹியங்கனை வீதியின் துன்ஹிட அம்பகஹஓய பிரதேசத்தில், நவம்பர் 1ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில், இரண்டு பேர் கொல்லப்பட்டு நாற்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள், தொகை கணக்கெடுப்பு ஆய்வுக்காக கல்விப் பயணத்தை மேற்கொண்டிருந்த மாணவர்கள் குழுவொன்று பயணித்த பஸ்ஸே, இவ்வாறு விபத்துக்கு, உள்ளாகியிருந்தது.