மொட்டுக்கட்சி உறுப்பினர் கொலை சம்பவம்; பெண் உட்பட மூவர் கைது.!

0
60

கேகாலை பிரதேச சபையின் மொட்டுக் கட்சி முன்னாள் உறுப்பினர் கிஷான்த புலஸ்தி கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் அவரது வீட்டிற்குள் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வர்த்தகர் ஒருவரின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 27ஆம் திகதி, அவர் கை, கால்கள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், இறந்து கிடந்தார். பின்னர், அவரது மனைவியும் கட்டப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்திலேயே இந்த கொலை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட அன்று அவர்களது வீட்டிலிருந்த ரூ. 10,000 பணம் மற்றும் உயிரிழந்தவரின் தங்க மோதிரம் என்பனவே களவாடப்படிருந்தன.

இந்த கொலை சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபருக்கும் தெடிகம மற்றும் வரக்காபொல பிரதேசங்களில் அண்மையில் இதேபோன்று இரண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணைகளை முன்னெடுத்த கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) தலைமைப் பொலிஸ் பரிசோதகர் அபசர அபேசேகரவுக்குத் தகவல் கிடைத்தது.

சந்தேகநபர்கள் பிலியந்தலை தும்போவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார் ஒரு பெண்ணையும் மேலும் இருவரையும் கைதுசெய்தனர்.

சம்பவத்தில் கைதான 53 வயதான பெண் ஒரு முக்கிய நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ள ஒரு நபரின் மனைவி என்றும் பணக்கார பின்னணியில் இருந்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணையின்போது, ​​குறித்த பெண்ணின் தூண்டுதலின் பேரில் இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

சம்பவத்தன்று குறித்த பெண் மூன்று கொள்ளையர்களுடன் கேகாலையில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதாகக் கூறி தனது சகோதரரின் காரில் வாடகைக்கு சாரதி ஒருவருடன் கேகாலை நோக்கி பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், குறித்த பெண் கெம்பிட்டிய வளவ்வ பிரதேசத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் காரை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்து மூன்று கொள்ளையர்களையும் உரிய இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி, மூன்று கொள்ளையர்களும் வீட்டிற்குள் நுழைந்து உரிமையாளரைக் கொன்றுவிட்டு, பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைத் தேடினர். ரூ. 10,000 பணம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் தங்க மோதிரமுமே கிடைத்தன.

பின்னர் தங்க மோதிரம் நகைக் கடை ஒன்றில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அண்மைக்கால நிதி நெருக்கடி காரணமாக குறித்த பெண்ணின் வழிகாட்டுதலின் பேரில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சந்தேகநபர்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நேற்று (05) கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நவம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here