வெலிகம பொல்அத்த ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
ரயிலுக்கான சமிஞ்ஞை ஒளிரும் வேளையில் ரயில் வருவதாக அருகில் இருந்தவர்கள் எச்சரித்ததையும் மீறி லொறி ரயில் கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியின் சாரதியான 34 வயதான நபரும் அவரது 80 வயதான தாத்தாவுமே உயிரிழந்தனர், விபத்தில் காயமடைந்த உயிரிழந்த சாரதியின் 01 மற்றும் 07 வயதுடைய இரு பிள்ளைகள், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் தாயார் ஆகியோர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
34 வயதான மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.