கேரள மாநிலம் கண்ணூரில் நாடகக் குழுவை ஏற்றிச் சென்ற தனியாருக்குச் சொந்தமான மினிபேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 நடிகைகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் நாடக குழுவைச் சேர்ந்த 20 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்த இரண்டு நாடக நடிகைகளும் காயங்குளத்தைச் சேர்ந்த அஞ்சலி மற்றும் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஜெஸ்ஸி மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்த நிலையில், அதில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றது. கண்ணூரில் நேற்று நாடகக் குழுவினர் நிகழ்ச்சி நடத்தினர். இன்று பத்தேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
முதலில் இக்குழுவினர் கெளகத்தில் இருந்து நெடும்பொயில் கணவாய் வழியாக வயநாட்டிற்குள் நுழைய முயன்றனர். எனினும் கணவாயில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் குறுக்குவழி வழியாக வயநாடுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.