முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கடந்த 08.11.2024 காலை காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 17.11.2024 அன்று உயிரிழந்துள்ளார்.
ஒட்டுசுட்டான் இத்திமடு வீதியில் வயல் காவலுக்காக மிதிவண்டியில் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சம்மளங்குளம் பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய இரத்தினசிங்கம் மகேந்திரராசா (வெள்ளை) என்பவரே யானை தாக்குதலுக்கு இலக்காகி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காக உயிரிழந்த மூன்றாவது நபர் இவர், மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு – இளமருதங்குளம் பகுதியில் கடந்த 28-10-24 இரவு யானை தாக்குதலுக்குள்ளான மூன்று முறிப்பு – வீரப்பராயன் குளத்தை சேர்ந்த 68 வயதுடைய சிவஞானம் ஸ்ரீஸ்கந்தராசா என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 27.10.2024 அன்று முத்துவிநாயகபுரம் முத்தையன் கட்டு பகுதியினை சேர்ந்த 23 அகவையுடைய கேந்திரராசா பிறையாளன் என்ற இளைஞன் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.