கேகாலை தெலியெல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தனது நண்பர்கள் குழுவுடன் கொண்டாடிக்கொண்டிருந்த போது இந்த விபத்துக்கு உள்ளானதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கேகாலை தெலியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பலர் ஓய்வெடுப்பதற்கு வரும் அழகிய இடம் இதுவாகும்.
கேகாலையை வசிப்பிடமாகக் கொண்ட அஷான் பிரபோத தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இந்த அழகிய தெலியெல்லவை தெரிவு செய்திருந்தார்.
எனினும் இந்த குழு நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீண்ட நேரமாக மது அருந்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர், குழுவினர் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, 27 வயதுடைய அஷான் நீரில் மூழ்கியுள்ளார்.
இந்நிலையில் காணாமல் போன குறித்த இளைஞரின் சடலம் நேற்று (18) பிற்பகல் நீர்வீழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞன் அடுத்த வாரம் வெளிநாடு செல்ல தயாராகி கொண்டிருந்த இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.