வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி தாழமுக்கம் வலுவடையுமென்பதால் அப்பகுதிக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்பின்னரான, 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வட மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்லவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
பலத்த மழையுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம் எனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் கடும் மழையுடன் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.