இன்றைய தலைமுறையினர் மத்தியில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் கூட எப்போதும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி மன ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
அதாவது 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை மந்திரி கூறுகையில்…
சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும். ஆனால், இந்த கட்டமைப்பிற்கும் சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் அனைவரின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் பேசுகையில்,
சிறுவர்களின் நலனுக்காக 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை உலகிலேயே முதல்முறையாக இயற்றியுள்ளோம் என்றார்.