பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்றைய தினம் புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார்.
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர், மே 31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
வடமராட்சியை சேர்ந்த இந்த சந்தேகநபர், தான் பாதாள உலகக் குழுவின் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா எனவும், அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து பூக்குடி கண்ணா என்பவருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாகவும், கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு, யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்ததாகவும் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேற்குறித்த சம்பவங்களின் பின்னணியில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகநபர் தெரிவித்ததையடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு நேற்றைய தினம் புதன்கிழமை அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பருத்தித்துறை நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட அதனை அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. மேலும் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றவர்கள் சகலரும் உடல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.