11 வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 08 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும், பிரதிவாதிக்கு 10,000/- அபராதம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு இரண்டு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இன்று (25) உத்தரவிட்டார்.
தாய் மற்றும் சகோதரியுடன் வெசாக் பிரதேசத்திற்கு சென்றிருந்த 11 வயதுடைய இந்த பிள்ளையை வெசாக் கூடு செய்து தருவதாகக் கூறி ஏமாற்றி இந்த குற்றச் செயலை மேற்கொண்டுள்ளமை வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜராகிய பாதிக்கப்பட்ட பிள்ளையிடம் நீதிபதி கேள்வி எழுப்பிய போது, இந்தக் குற்றச்செயல் காரணமாக தன்னால் நீண்ட காலமாக பாடசாலை செல்ல முடியவில்லை எனத் தெரிவித்தார்.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்தக் குற்றத்தைச் செய்யும் போது குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தை என்றும், இவ்வாறான சூழ்நிலையில் அவர் செய்த குற்றத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
அதன்படி தண்டனையை நிர்ணயிக்கும் போது அந்த விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.
அதன்படி, சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.